வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சிறுமி குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரத்தில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துவர்சினி என்ற மகள் இருந்துள்ளார். இவர் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தர்மத்துப்பட்டியில் நடைபெற்ற உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்ள சிறுமி தனது குடும்பத்துடன் வந்துள்ளார். அப்போது அவ்வூரில் உள்ள குளத்தில் சிறுவர்கள் மீன்பிடிப்பதை அருகில் நின்று வேடிக்கை பார்த்துள்ளார். பின்னர் திடிரென எதிர்பாரா விதமாக அவர் குளத்தில் தவறி விழுந்ததால் அருகிலிருந்தவர்கள் சிறுமியை மீட்க முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் சிறுமியை மீட்க முடியாத காரணத்தினால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதில் தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் சிறுமி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.