ஆம்பூரில் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் புதுமனை பகுதியில் இம்தியாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் ஷூ தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இம்தியாஸ் தன் நண்பரான நபிஸ் என்பவருடன் கம்பிகொல்லை பகுதியில் இருக்கும் ஆணைமடுகு தடுப்பணைக்கு குளிக்க சென்றுள்ளனர். அங்கு நண்பர்களான இருவரும் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென இம்தியாஸ் நீரில் மூழ்கியதால் அவரை காப்பாற்றுவதற்காக நபிசும் தண்ணீரில் மூழ்கி திணறியுள்ளார்.
இதனையடுத்து அப்பகுதியில் இருக்கும் இளைஞர்கள் நீரில் திணறிக் கொண்டிருந்த நபிசை மீட்டுள்ளனர். ஆனால் இம்தியாஸ் தடுப்பணையில் இருக்கும் சேற்றில் சிக்கியதால் அவரை மீட்க முடியாமல் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின்படி விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் இளைஞர்களின் உதவியுடன் இம்தியாஸை நீரில் இருந்து சடலமாக மீட்டுள்ளனர். அதன்பின் காவல்துறையினர் இம்தியாஸ் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.