குளிக்க சென்ற கல்லூரி மாணவர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் இருக்கும் கோ. ஆதனூர் கிராமத்தில் வினோத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில் வினோத்குமார் தனது நண்பர்களுடன் அதே பகுதியில் இருக்கும் மணிமுக்தா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு இருக்கின்ற தடுப்பணையில் குளிக்க சென்றுள்ளார். ஆனால் தற்போது பெய்து வரும் கனமழையினால் அந்த தடுப்பணையில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனை அறியாத வினோத் குமார் மற்றும் அவரது நண்பர்கள் தடுப்பணையின் குறுக்கே நடந்து சென்று மறுகரையில் இருக்கும் ஆழமான பகுதியில் இறங்கி குளித்து கொண்டிருக்கும் போது வினோத்குமார் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் வினோத்குமாரை காப்பாற்ற முயற்சி செய்தும் முடியாமல் போய்விட்டது. இது பற்றி அவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் மணிமுக்தா ஆற்றில் இறங்கி வினோத்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டதில் அவர் கீழபாலையூர் அணைக்கட்டுப் பகுதியில் சடலமாக கிடந்துள்ளார். பின்னர் வினோத்குமாரின் உடலை மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.