மின்சாரம் பாய்ந்து மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நம்பியூர் எரிக்காட்டுப்பள்ளம் பகுதியில் முருகன்-வடிவு என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு பானுமதி என்ற மகளும், உதயகுமார் என்ற மகனும் இருந்தனர். இதில் பானுமதி நஞ்சை புளியம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு பயின்று வந்தார். இவர் தனது வீட்டில் உள்ள குளியலறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த இரும்பு கதவில் மின்கசிவு ஏற்பட்டதை கவனிக்காமல் மாணவி அதை தொட்டதால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து குளிக்கச் சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது தாய் தனது மகன் உதயகுமாரிடம் அக்காவை வரசொல் என்று கூறியுள்ளார்.
அதன்பின் உதயகுமார் குளியல் அறையின் கதவை தட்டியபோது அவரையும் மின்சாரம் லேசாக தாக்கியது. இதனால் உதயகுமார் தனது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அவரது தந்தை முருகன் மின் இணைப்பை உடனடியாக துண்டித்து விட்டு குளியலறைக்குள் சென்று பார்த்துள்ளார். அங்கு மின்சாரம் பாய்ந்து பானுமதி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.