குளிக்கச்சென்ற கட்டிட தொழிலாளி கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள பெரிய கொண்டாபுரம் காந்திநகர் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணமூர்த்தி என்ற மகன் இருந்தார். இவர் கட்டிட தொழிலாளியாக இருந்து வந்தார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி தன் நண்பர்களுடன் சேர்ந்து குளிப்பதற்காக மாரியம்மன் கோவில் அருகே உள்ள விவசாய கிணற்றுக்கு சென்றார். அங்கு கிணற்றில் குளிப்பதற்காக குதித்த கிருஷ்ணமூர்த்தி நீண்ட நேரம் ஆகியும் மேலே வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அவரது நண்பர்கள் கிராம நிர்வாக அலுவலரான விஜயராஜிக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் தகவலின்படி காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதன்பின் தீயணைப்பு படையினர் கிணற்றில் இறங்கி கிருஷ்ணமூர்த்தியை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது கிணற்றில் அதிகமாக தண்ணீர் இருந்ததால் கிருஷ்ணமூர்த்தியின் உடலை மீட்க முடியவில்லை.
இதனால் மின் மோட்டார் மூலம் கிணற்றில் இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தியின் சடலத்தை தீயணைப்பு படையினர் மீட்டனர். அதன் பிறகு காவல்துறையினர் கிருஷ்ணமூர்த்தியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் கிருஷ்ணமூர்த்தி குடிபோதையில் கிணற்றில் குதித்து இறந்து இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.