காவிரி சாலையில் சரக்கு வேன் குழியில் சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
மின் கேபிள் பதிக்கும் திட்டம், ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டம் போன்றவற்றிற்காக ஈரோடு மாவட்டத்திலுள்ள கருங்கல் பாளையம் காவிரி சாலை தோண்டப்பட்டது. அதன்படி தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் குழிகள் சரியாக மூடப்படாததால் காவிரி சாலை தற்போது குண்டும் குழியுமாக காணப்படுகிறது. ஈரோட்டில் இருந்து சேலம், நாமக்கல், திருச்செங்கோடு, சென்னை போன்ற பகுதிகளுக்கு காவிரி சாலை வழியாகத்தான் செல்ல வேண்டியது இருக்கிறது. மேலும் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் அவ்வழியே வருவதால் காவிரி சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
ஆகவே தற்போது காவிரி சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் வண்டியூரான் கோவில் வீதியிலிருந்து ஆர்.கே.வி. ரோடு வரை செல்வதற்கு நீண்ட நேரம் ஆகிறது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இருசக்கர வாகனம் குழியில் ஏறி இறங்கும்போது அதன் உரிமையாளர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் மழை பெய்ததால் காவிரி சாலை சேறும் சகதியுமாக காட்சி அளித்தது. அப்போது அவ்வழியாக சென்ற சரக்கு வேன் ஒன்று அந்த குழிக்குள் சிக்கி நடுரோட்டில் நின்றது.
இதனால் காவிரி சாலை வழியே வந்த வாகனங்கள் தொடர்ந்து செல்ல முடியாமல் அங்கு அணிவகுத்து நின்றது. இதுகுறித்து தகவலறிந்த போக்குவரத்து காவல் அதிகாரி சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியைச் சேர்ந்த சிலருடன் சேர்ந்து குழிக்குள் சிக்கிய வாகனத்தை தள்ளி வெளியில் எடுத்தார். இதனையடுத்து அந்த சரக்கு வேன் அங்கிருந்து புறப்பட்டது. எனவே இந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.