கர்நாடக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம்(எஸ்) கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்றது.இதில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 16 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது MLA பதவியை ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர். இதில் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கரெட்டி அவரின் ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற்று விட்டார். மற்ற 15 MLA_க்களும் எந்த காரணத்தைக் கொண்டும் ராஜினாமா முடிவிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என்று உறுதியாக இருந்தனர். இதையடுத்து கடந்த 18-ஆம் தேதி தனது அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்தார்.
பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீதான விவாதம் கர்நாடக மாநில சட்டசபையில் நடந்தது. மேலும் கடந்த 19-ஆம் தேதியே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதல்வர் குமாரசாமிக்கு, கவர்னர் வஜூபாய்வாலா உத்தரவிட்டார். ஆனால் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது அனைத்து அதிருப்தி MLA_க்களும் பேச வேண்டுமென்றும் , முழு விவாதம் நடைபெற்ற பின்னர் தான் வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்றும் கூறி குமாரசாமி புறக்கணித்தார். மேலும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் அரசு விடுமுறைக்கு பின்னர் மீண்டும் நேற்று காலை சட்டசபை சட்டசபை கூடி விவாதம் நடைபெற்றது.நேற்று இரவு 11 மணி வரை விவாதம் நடைபெற்றது. இதில் ராஜினாமா செய்துள்ள 15 MLA_க்களையும் தகுதி நீக்கம் செய்யுமாறு சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
கட்சியின் கொறடா உத்தரவை மதிக்காமல் காங்கிரஸ் கட்சி மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 15 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருந்து வருவதால் அவர்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு காங்கிரஸ் கட்சி மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 10 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று சபாநாயகர் நோட்டீசு அனுப்பி இன்று விளக்கம் அளிக்குமாறு கோரினார்.
இந்நிலையில் இன்று காலை கர்நாடக மாநில சட்டசபை கூடியதும் , நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. மேலும் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதால் இன்று மாலை 6 மணி முதல் அடுத்த 48 மணி நேரத்துக்கு பெங்களுருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து மதுபானக் கடைகளும், பார்களையும் மூட உத்தரவிடப்பட்டது. நீண்ட நேர விவாதத்திற்கு பின் கர்நாடக சட்ட பேரவையில் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 எம்.எல்.ஏ.க்களும், எதிராக 105 எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்துள்ளனர். இதனால் குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்து ஆட்சியை இழந்தது.