கன்னியாகுமரியில் இடியுடன் கூடிய மழையில் வீட்டின் மேற்கூரை விழுந்ததில் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ராமன்துறை பகுதியில் டயானா பெக்மீர்- கவிதா என்ற தம்பதியினர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு மைக்கிள் ராஜா, ஆரோக்கிய ரக்ஷன் என்ற 2 மகன்களும், ரெஜினா என்ற 2 வயது மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் டயானா பெக்மீர் குடும்பத்தினருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும்போது, இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. அப்போது வீட்டின் மேற்கூரை இடிந்து உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது விழுந்ததில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து வலி தாங்க முடியாமல் அவர்கள் கத்தியதால் அருகில் இருப்பவர்கள் ஓடி வந்து பார்த்துள்ளனர். அதன்பின் படுகாயமடைந்த அனைவரையும் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் இரண்டு வயது குழந்தையான ரெஜினாவை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவரது பெற்றோர் மற்றும் சகோதரர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.