பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 2 நபர்களை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சென்னல்பட்டி பகுதியில் மகேஷ் சண்முகம் என்பவரும், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணார்ப்பேட்டை பகுதியில் பேராட்சி செல்வம் என்பவரும் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரின் மீதும் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் போதை பொருள்கள், கஞ்சா கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இதனால் காவல்துறையினர் இவர்கள் இருவரையும் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் நெல்லை மாநகர சட்டம்-ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் மகேஷ் சண்முகம் மற்றும் பேராட்சி செல்வம் ஆகியோரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் மகேஷ் சண்முகம் மற்றும் பேராட்சி செல்வம் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான உத்தரவை பாளையங்கோட்டை சிறை அதிகாரியிடம் வழங்கியுள்ளனர்.