குண்டும் குழியுமாக விபத்தை ஏற்படுத்தும் விதத்தில் உள்ள போரூர் to குன்றத்தூர் சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர்.
சென்னை நகரத்தின் மிக முக்கிய நுழைவு வாயிலாக கருதப்படுவது போரூர் டு குன்றத்தூர் சாலை. இந்த சாலையை சென்னையைச் சுற்றியுள்ள நந்தம்பாக்கம், சோமங்கலம், சிறுகளத்தூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சுத்திகரிப்பு குடிநீர் கொண்டு செல்வதற்காக கோவையில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்று பள்ளம் தோண்டி பணி நிறைவு பெற்ற நிலையில், தற்போது நான்கு வழி சாலை அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வருவதால் போக்குவரத்து நெரிசல் இப்பகுதியில் கடுமையாக பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், சாலைகள் பெயர்க்கப்பட்டு ஆங்காங்கே குண்டும் குழியுமாக காட்சி அளிப்பதால் சில நேரங்களில் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை ஏதும் இல்லாததால் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் மற்றொரு மனு அளித்துள்ளனர். அதில் குண்டும் குழியுமான சாலைகளாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் விபத்து ஏற்படுவதோடு அவசர கால கட்டங்களில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு உள்ளிட்ட வாகனங்கள் செல்ல தடையாக இருப்பதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.