குப்பையில் வீசப்பட்ட பொருட்களை வைத்து வளர்க்கப்பட்ட பூச்செடிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபி நகராட்சியில் 30 வார்டுகள் இருக்கின்றது. இங்கே சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் கரட்டூர் கிடங்குக்கு கொண்டு செல்லப்படும். இந்த குப்பைகளை சேகரிக்கும் போது பாட்டில்கள், பிளாஸ்டிக் மற்றும் பல்வேறு வகையான பொருட்கள் கிடைக்கிறது. இந்நிலையில் சேகரிக்கப்பட்ட குப்பைகளில் பொதுமக்கள் ஹெல்மெட், கழிவறை கோப்பை, டயர் மற்றும் உபயோகிக்க முடியாத பொருட்களை வீசி செல்கின்றனர். இதனை சுகாதார பணியாளர்கள் சேகரித்து நகராட்சி அலுவலகத்திற்கு முன் வைத்து பூச்செடிகளை வளர்த்து வருகின்றனர்.
அதாவது உடைந்த ஹெல்மெட்டுகளில் வர்ணங்கள் பூசி அதை கயிற்றால் கட்டி தொங்கவிட்டு மண் போட்டு சுகாதார பணியாளர்கள் பூச்செடிகளை வளர்த்து வருகின்றனர். அதுமட்டுமின்றி கழிவறை கோப்பைகளிலும் வர்ணங்கள் பூசி பூச்செடிகள் வளர்த்து வருகின்றனர். இதனையடுத்து நகராட்சி அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் இந்த பூச்செடிகளை ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். ஆகவே பொதுமக்கள் இதுபோன்ற பொருட்களை குப்பைகளில் வீசாமல் வீடுகளில் இப்படி பயன்படுத்தலாம் என நகராட்சி நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.