சென்னை மாநகராட்சிக்கு பிறகு அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது மாநகராட்சி என்றால் அது கோவை தான். மொத்தம் 100 வார்டில் 30 லட்சம் பேர் வசித்து வருகிறார்கள். கோவையில் ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் குப்பைகள் சேகரிப்பதில் புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது. அதாவது, வழக்கமாக கனரக வாகனங்கள், குப்பை அள்ளும் ஆட்டோ போன்றவை மூலம் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படும். இந்த வாகனங்களை பராமரிப்பிற்கு எடுத்துச் சென்று பல மாதங்கள் ஆகிவிட்டதாக தகவல் கூறப்படுகிறது. சர்வீஸ் முடிந்து இன்னும் வரவில்லையாம். கோவை மாநகராட்சி தற்போது திமுகவிடம் உள்ளது. அதாவது ஆளுங்கட்சியின் கைகளில் உள்ளது. இத்தகைய சூழலில் வார்டுகளில் குப்பைகள் அள்ளப்படாமல் சேர்ந்து வருவது சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து பொதுமக்கள் கவுன்சிலர்களை பார்த்து புகார்கள் தெரிவித்து வருகின்றனர். அதில் அதிகம் மாட்டிக் கொண்டு விழிப்பது திமுக கவுன்சிலர்கள் தான். இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டால், தூய்மை பணியாளர்கள் தங்கள் பணிகளை சரிவர செய்து விடுகின்றனர்.
ஆனால் குப்பைகளை கிடங்கிற்கு எடுத்துச் செல்ல வாகனங்கள் இல்லை என்று கூறுகின்றனர். இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் ஒருவரிடம் கேள்வி கேட்கப்பட்டால், அதற்கு அவர் மழுப்பலான பதிலை கூறி விட்டு வழக்கம் போல் தனது பணிகளை தொடர்வதாக கவுன்சிலர்கள் புலம்பி வருகின்றனர். இதனையடுத்து ஒரு புறம் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம், போராட்ட என போர் கொடி தூக்க மறுபுறம் 15 மாதங்களில் கோவை மாநகராட்சி குப்பைகள் இல்லாத மாநகராட்சியாக மாற்றி காட்டுவேன் என ஆணையாளர் பேட்டி அளித்து உள்ளார். இந்த சூழலில் ஆணையரிடம் கேள்வி எழுப்பினால், எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என கூலாக பதில் அளிப்பதாக கூறுகிறார். இதே நிலை நீடித்தால் வருகின்ற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் திமுகவின் நிலை சிக்கலாக மாற வாய்ப்பு உள்ளது.
ஏனென்றால் இந்த ஒரு விஷயம் மட்டுமில்ல கோவை மாநகர 100% வரியை உயர்த்தியது. பாதாள சாக்கடை திட்டம் முழுமை அடையாது, தார் சாலைகள் குண்டு குழியுமாக பராமரிப்பின்றி இருப்பது, குடிநீர் வழங்குவதில் சரியான நடைமுறை இல்லாதது, குப்பை எடுத்துச் செல்வதில் வாகன குறைபாடு, முன்னறிவிப்பின்றி குழி தோண்டும் சுயஸ் நிறுவனம் மற்றும் மக்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்குவது, சுகாதார சீர்கெட்டல் நோய் தொற்று ஏற்படுவது, டெங்கு காய்ச்சல் பாதிப்பு என புகார்கள் வரிசையாக வருகிறது. இது குறித்து மூத்த தூய்மை பணியாளர்கள் கூறியது, மாநகராட்சியின் நிர்வாகத்தால் தான் பெரிய அளவில் வேலைநிறுத்தம் நடைபெற்றது. கோவை மாநகராட்சி இன்னும் முன்னாள் அமைச்சரின் கைபாவையாகவே உள்ளது. இது நீடித்தால் அப்புறம் சிக்கல் தான் என்று கூறுகின்றனர். எனவே கோவைக்கு அனுபவம் உள்ள மூத்த நிர்வாகிகள் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நியமிக்க வேண்டும். அப்போதுதான் மாநகராட்சி பிரச்சனை தீர்க்க முடியும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.