பொதுமக்களின் அடையாள அட்டைகள் குப்பை மேட்டில் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் தாலுகா அலுவலக வளாகத்தில் வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்கான பிரிவு இயங்கி வருகின்றது. இங்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை மற்றும் முகவரி, பெயர் திருத்தம் உள்ளிட்ட பல தேவைகளுக்காக பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தாலுகா அலுவலகம் எதிரே இருக்கும் குப்பை மேட்டில் கட்டுக்கட்டாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் கிடந்துள்ளது.
அதில் ஒரே பெயர், விலாசம் கொண்ட அடையாள அட்டைகள் மற்றும் அடையாள அட்டை விண்ணப்பத்திற்கான வரிசை எண்கள் கூடிய ரசீதுகளுடன் ரப்பர் பேண்ட் போட்டு கட்டுக்கட்டாக கிடந்துள்ளது. இது பற்றி சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது, குப்பை மேட்டில் வாக்காளர் அடையாள அட்டைகள் வீசப்பட்டு இருக்கிறது.
இந்த அடையாள அட்டைகளை மர்ம நபர்கள் யாரேனும் எடுத்து சென்று சமூக விரோத செயல்களில் ஈடுபடும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. ஆதலால் வாக்காளர் அடையாள அட்டைகளை குப்பை மேட்டில் வீசிய நபர்கள் யார் என்பது தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.