ஊரடங்கு அமலில் இருப்பதால் அவசர தேவை இன்றி வெளியில் சுற்றி திரிபவர்களை காவல்துறையினர் எச்சரித்து திருப்பி அனுப்பியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமுலுக்கு வந்ததனால் மாவட்டம் முழுவதிலும் இருக்கக்கூடிய அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றது. எனவே அத்தியாவசிய தேவைகளான மளிகை பொருட்கள், காய்கறி கடைகள், டீக்கடைகள், இறைச்சி கடைகள் போன்றவை பகல் 12 மணிவரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் மருந்து கடைகள், பால் வினியோகம் போன்றவற்றிற்கு முழு நேரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்பட்டு பணியாளர்கள் பணிபுரிந்துள்ளனர். அதேபோன்று ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை வழக்கம்போல் செயல்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பெறுவதற்கு யாரும் வராததால் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்கள பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து குமரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கிறதா என்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அத்தியாவசிய தேவை இன்றி இரு சக்கர வாகனம் மற்றும் வண்டிகளில் சுற்றி திரிபவர்களை காவல்துறையினர் எச்சரித்து திருப்பி அனுப்பியுள்ளனர். மேலும் கன்னியாகுமரி மாவட்ட எல்லைப் பகுதிக்கு காவல்துறையினர் கூடுதலாக நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து வெளியூர்களிலிருந்து வரும் வாகனங்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். இவ்வாறு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.