சிரியாவில் உள்ள குர்துப் படையினர் எங்கள் மீது நடத்தும் தாக்குதலை தடுப்பது குறித்து அமெரிக்காவும் ரஷ்யாவும் தவறி விட்டதாக துருக்கி அரசானது குற்றம் சாட்டியுள்ளது.
சிரியா குர்துப் படையினர் துருக்கியின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதனை அமெரிக்காவும் ரஷ்யாவும் தடுக்காததன் காரணத்தால் துருக்கி அரசாங்கம் இராணுவ நடவடிக்கையை சிரியாவின் மீது மேற்கொள்ளலாம் என அச்சம் நிலவி வருகிறது. இதனைக் குறித்து துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் மெவ்லுட் காவுசோகுலு கூறியதாவது, “குர்துப் படையினர் எங்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்காவும் ரஷ்யாவும் தான் பொறுப்பேற்க வேண்டும்.
ஏனெனில் எங்களின் மீது தாக்குதல் நடைபெறாமல் இருக்க அப்படையினை கட்டுப்படுத்த உள்ளதாக இரு நாட்டு அரசுகளும் எங்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால் தற்பொழுது அவர்கள் அதனை மீறி விட்டார்கள். சிரியாவின் எல்லைப் பகுதியில் இருந்து தாக்குதல் நடத்தும் இவர்களை விரட்டியடிக்க நாங்கள் எந்த வகை நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். மேலும் சிரியாவிலிருந்து எறியப்பட்ட பீரங்கி குண்டு விழுந்து வீடுகள் சேதமாகி உள்ளன. அதுமட்டுமல்லாமல் குர்துப் படையினர் வீசிய இரண்டு சிறிய வகை ஏவுகணை தாக்குதலில் 2 துருக்கி காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர்.
இதனை குறித்து அமெரிக்கா கண்டித்து அறிக்கை வெளியிட்ட போதிலும் இதில் நம்பகத்தன்மை எதுவுமில்லை. அமெரிக்காதான் சிரியாவில் உள்ளவர்கள் எங்களை தாக்க இந்த படையினருக்கு பயிற்சிகளை அளித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் செயல்களுக்கு அமெரிக்காவானது உதட்டளவில் மட்டுமே கண்டனம் தெரிவித்துவிட்டு அவர்களுக்கு மறைமுகமாக பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். ஆகவே அவர்கள் துருக்கியின் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுக்க மாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.