சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் அரசியலின் கத்துக்குட்டியே குருமூர்த்திஎன்று விமர்சித்தார்.
சென்னையில் ராஜாஜியின் 141-வது பிறந்தநாளையொட்டி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் அவரது உருவ சிலைக்கும், திருவுருவப் படத்திற்கும் அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் மலர்தூவி தங்களது மரியாதையை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறும்பொழுது…. ஒரு குழப்பம் நிறைந்த கட்சி திமுக.மேலும் நீதிமன்றத்திடம் சென்று தேர்தலை ரத்து செய்யவும் முயற்சித்தனர். தீர்ப்பு வந்த பின் அதை ஏற்றுக்கொள்வதாக கூறிய ஸ்டாலின், தற்போது நீதிமன்றம் சென்றுள்ளார். உள்ளாட்சி தேர்தலை வரவேற்பதாகவும், அதே சமயத்தில் நீதிமன்றம் சென்று மக்களை ஏமாற்றுக்கின்ற செயலை ஸ்டாலின் செய்து வருகின்றார் என குற்றம் சாட்டினார்.
மேலும், குருமூர்த்தியின் விமர்சனத்திற்கு, எதிராக அதிமுக தான் விமர்சனம் செய்து வருகிறது. அதிமுகவை விமர்சனம் செய்தால் மட்டும் தான் மிகப் பெரிய ஆளாக முடியும் என்று குருமூர்த்தி பேசி வருகின்றார். எனவே அவர் அரசியலில் இருக்கும் கத்துக்குட்டி என்றும், சர்ச்சையை உருவாக்குவதன் மூலம் விளம்பரம் தேட வேண்டும் என்பதற்காக பேசி வருகிறார் எனவும் ஜெயக்குமார் கூறினார். இதைத் தொடர்ந்து பேசிய அவர் ஊரக உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை முழுமையாக அதிமுக பின்பற்றி வருகிறது என்றும் கூறினார்.