குறுவை சாகுபடி பாசன வசதிக்காக கோரையாறு தலைப்பு அணை திறக்கப்பட்டதால் விவசாயிகள் பயனடைவார்கள்.
திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணை கடந்த 12-ஆம் தேதி முதல்வர் திரு. முக. ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதனையடுத்து மேட்டூர் அணை நீர் கடந்த 16-ஆம் தேதி தஞ்சை மாவட்டம் கல்லணை அடைந்து காவேரி டெல்டா பாசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டது. அதன்பின் கல்லணையிலிருந்து பாசன நீர் பெரிய வெண்ணாற்றின் மூலம் கோரையாறு தலைப்புக்கு அதிகாலை 1 மணிக்கு வந்தடைந்தது. இந்த கோரையாறு தலைப்பை மூணாறு தலைப்பு என்றும் மக்கள் அழைப்பார்கள்.
இதனைத்தொடர்ந்து பாசனத்துக்காக கோரையாறு தலைப்பு அணை திறக்கப்பட்டு வெண்ணாற்றில் 450 கன அடி நீரும், கோரையாற்றில் 662 கன அடி நீரும், பாமணியாற்றிலிருந்து 210 கன அடி நீரும் திறந்துவிடப்பட்டது. அதனை பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் கோரையாறு தலைப்பு அணையை திறந்து வைத்தனர். இதனால் வெண்ணாற்றின் மூலம் 94 ஆயிரத்து 219 ஏக்கரும், கோரையாற்றின் மூலம் 1 லட்சத்து 20 ஆயிரத்து 957 ஏக்கரும், பாமணியாற்றின் மூலம் 38 ஆயிரத்து 357 ஏக்கரும் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் இன்னும் 3 நாட்களில் கடைமடை பகுதிகளுக்கு நீர் சென்று அடைவதனால் திருவாரூர், நாகை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்கள்.