கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே குருவி கூட்டை எடுக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர் தாலுக்கா சோம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் தனது உறவினர் நாகராஜன் உடன் அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்து குருவி கூட்டை எடுப்பதற்கு சத்தியமூர்த்தி முயன்றுள்ளார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தார். உடனே அவரை காப்பாற்றுவதற்காக நாகராஜ் கிணற்றில் குதித்தார்.
ஆனால் இருவருக்கும் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கிணற்றடிக்கு விரைந்து சென்று அவர்களை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.