இந்தியா முழுவதும் 805 இடங்களில் சுங்கச்சாவடிகள் இருக்கிறது. இதில் தமிழகத்தில் 54 இடங்களில் இருக்கிறது. இந்த சுங்கச்சாவடிகள் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சுங்க கட்டணம் வசூலிக்கும் போது வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருப்பதால் பாஸ்டேக் முறை அறிமுகப் படுத்தப்பட்டது. இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்து செல்லும்போது ஸ்கேன் செய்யப்பட்டு வங்கி கணக்கில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படுகிறது.
இந்த பாஸ்டேக் முறையினால் வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை வராது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை மட்டுமே அளித்தது. இதன் காரணமாக நெடுஞ்சாலை ஆணையம் வெளிநாடுகளில் பின்பற்றி வருவது போன்று ஜிபிஎஸ் முறையை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சுங்கச்சாவடிகளின் அருகில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜிபிஎஸ் பொருத்தப்படும்.
இந்த ஜிபிஎஸ் உதவி மூலம் வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்து செல்லும்போது வங்கி கணக்கில் இருந்து தானாகவே பணம் எடுத்துக் கொள்ளப்படும். இந்தத் திட்டத்தில் பல்வேறு விதமான சிக்கல்கள் இருப்பதாக கூறப்பட்டாலும் ஜனவரி மாதம் முதல் திட்டம் பயன்பாட்டுக்கு வரஇருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திட்டம் தமிழ்நாட்டில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், சேலம், திருச்சி, திருவள்ளுவர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை உள்ளிட்ட 10 சுங்கச்சாவடிகளில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.