குடிநீர் வழங்காததை கண்டித்து கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் தொட்டி மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் தற்போது குடிநீர் தொட்டியானது சேதம் அடைந்திருப்பதால் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. அதன்பின் ஆழ்துளை கிணற்றின் மூலம் தண்ணீர் வருவதற்காக பழுதான மோட்டாருக்கு பதில் ஊராட்சி நிர்வாகம் ஒன்றரை லட்சத்திற்கு புதிய மோட்டார் வாங்கி பொருத்தியுள்ளது. ஆனாலும் தங்கள் பகுதிக்கு இன்னும் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக்கூறி அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கீரமங்கலம் காவல்துறையினர் மற்றும் ஊராட்சித் தலைவர் ஜியாவுதீன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.