காரில் குட்கா பொருள்கள் கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை-பழனி சாலையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்கு எடுத்துச் செல்வதாக மடத்துக்குளம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் வந்த காரை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் காரில் வந்த அம்பலப்பட்டு பகுதியில் வசிக்கும் ராஜா மற்றும் அந்தோணி ஞானபிரதீஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள 666 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.