குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக தென்றல் காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்தது. இதனையடுத்து அங்குள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்வதால் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இதனைத்தொடர்ந்து குற்றாலத்தில் தொடர் சாரல் மழை பெய்து வருவதால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் அதிகமாக தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்கவும், வெள்ளப்பெருக்கை பார்ப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுலா பயணிகள் மெயின் அருவியை சற்று தூரத்தில் நின்று பார்த்து செல்கின்றனர்.