குற்றச்செயல்களில் ஈடுபட்ட பெண் உட்பட 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி. காலனியில் வினோத்குமார் என்பவர் கடந்த மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பழனிச்சாமி மற்றும் அவரது கூட்டாளி விஜி உட்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்தனர். இந்நிலையில் பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபடும் பழனிச்சாமி, விஜி ஆகிய 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யகோரி போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜ், இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். அதன்படி பழனிச்சாமி, விஜி ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.
சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியில் பரிமளா என்பவர் வசித்து வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன் ரேஷன் அரிசி கடத்தியது தொடர்பாக பரிமளாவை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து பரிமளாவிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் மீது ஏற்கனவே உணவு கடத்தல் தடுப்பு பிரிவில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் பரிமளாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் இன்ஸ்பெக்டரான பாலமுருகன் மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தார். இதை பரிசீலித்து பரிமளாவை கள்ளச்சந்தைகாரர் என்ற பிரிவில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.