முககவசம் அணிந்திருப்பதால் காவல்துறையினரால் குற்றவாளிகளை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் 3 லட்ச ரூபாய் பணம் மற்றும் 37 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதேபோல் காளீஸ்வரன் நகரிலிருக்கும் ஒரு வீட்டில் மர்ம நபர் 20 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை பிடிப்பதற்காக தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதில் கொள்ளையடித்து செல்லும் நபரின் உருவம் பதிவாகி இருந்தாலும் அவர்கள் முகக்கவசம் அணிந்து இருப்பதால் அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, வீடுகளில் கொள்ளையடித்து செல்லும் குற்றவாளிகள் முககவசம் அணிந்திருந்ததால் யாராலும் அவர்களை அடையாளம் காட்ட இயலவில்லை. இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.