பொய்கை வாரச்சந்தையில் மாடுகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டு 2 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு தாலுகா பொய்கை சத்தியமங்கலத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கமாக இருக்கின்றது. இந்த வாரச்சந்தைக்கு வெளிமாநிலங்களில் இருந்தும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் உயர்ரக கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் போன்றவைகள் விற்பனைக்காக வருகின்றது. இந்த வாரச்சந்தையில் வழக்கம் போல் அதிக அளவில் கறவை மாடுகளும், மற்ற கால்நடைகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. எனவே பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அதிக அளவில் மாடுகள் விற்பனை செய்யப்பட்டது. அதன்படி காலையில் இருந்து 12 மணி வரை மாட்டு சந்தையும், பின் இரவு 8 மணிவரை காய்கறிச்சந்தையும் நடைபெற்றது. இதில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் அடித்து பிடித்து வாரச்சந்தையில் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த வியாபாரி கூறியபோது கடந்த 3 மாதத்திற்கு பிறகு நடந்த வாரச்சந்தையில் ஆயிரக்கணக்கில் கறவை மாடுகள் மற்றும் இறைச்சிக்காக பயன்படுத்தும் மாடுகள் கொண்டு வரப்பட்டது. ஆகவே ஒருநாள் மட்டும் 500-க்கும் மேற்பட்ட இறைச்சி மாடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரி தெரிவித்துள்ளார். இவ்வாறு 25 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை அந்த இறைச்சி மாடுகள் விற்பனை செய்யப்பட்டது. மேலும் கறவை மாடுகள் 40 ஆயிரம் ரூபாய் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரி தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இடைத்தரகர்கள் அதிகளவில் லாபம் பெற்றதால் இந்த வாரத்தில் மட்டும் வாரச்சந்தையில் 2 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரி தெரிவித்துள்ளார்.