ஈரானிய கப்பல்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு குவைத் தற்காலிக தடை விதித்துள்ளது.
உலகையே பயமுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரையில் சீனாவில் 2,592 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 77, 150 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல ஈரானில் கொரோனா வைரஸ் நோய் தாக்கம் காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழந்து, 43 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் தங்கள் நாட்டுக்கும் (குவைத்) கொரோனா வைரஸ் பரவும் என்ற அச்சம் காரணமாகவே ஈரானிய கப்பல்கள் குவைத்திற்குள் நுழைவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தீர்மானமானது ஷூய்பா, தோஹா மற்றும் ஷுவைக் உள்ளிட்ட துறைமுகங்களை உள்ளடக்கியது என குவைத் துறைமுக ஆணையகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒரு பகுதி இதுவென்று குவைத் துறைமுக ஆணையகத்தின் தலைவர் ஷேக் யூசப் அப்துல்லா அல் சபா தெரிவித்துள்ளார். முன்னதாக ஈரானுக்கான அனைத்து விமானங்களையும் நிறுத்தி வைப்பதாக குவைத் ஏயர்வேஸ் கடந்த வியாழக்கிழமை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.