லாரி கவிழ்ந்த விபத்தில் கிளீனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவிலிருந்து இரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கேரள மாநிலம் திருச்சூருக்கு புறப்பட்டது. இந்த லாரியை பாகிமானூர் பகுதியில் வசித்து வரும் சிதம்பரம் என்பவர் ஓட்டினார். இவருடன் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் கிளீனராக உடன் இருந்தார். இதனையடுத்து தர்மபுரி மாவட்டம் மாட்லாம்பட்டி பகுதியில் வந்தபோது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய கிளீனர் சந்தோஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் டிரைவர் சிதம்பரம் படுகாயமடைந்தார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து படுகாயமடைந்த டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிளீனர் சந்தோஷ்குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.