சாராயம் காய்ச்சுவதற்காக வெல்லத்தை கடத்தி சென்ற லாரி ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் மேம்பாலத்தில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்ய முயற்சி செய்த போது அதிலிருந்து ஒருவர் தப்பி ஓடியுள்ளார். அதன்பின் லாரி ஓட்டுனரை காவல்துறையினர் பிடித்து மினி லாரியில் இருந்த காய்கறி மூட்டைகளை சோதனை செய்துள்ளனர். இதில் காய்கறி மூட்டைகளுக்கு அடியில் 120 லிட்டர் சாராயம் மற்றும் வெல்லம் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதனை அடுத்து லாரி ஓட்டுனரை விசாரணை நடத்தியதில் அவர் தமிழ்மணி என்பதும், தப்பி ஓடியவர் அண்ணாதுரை என்பதும், சாராயம் காய்ச்சுவதற்காக பெங்களூருவிலிருந்து வெல்லத்தை கடத்தி வந்ததும், பின் சந்தேகம் வராமல் இருப்பதற்காக மேல்பகுதி மூட்டைகளில் காய்கறிகளை வைத்திருந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழ் மணியை காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து 750 கிலோ வெல்லம், 120 லிட்டர் சாராயம் மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தப்பி சென்ற அண்ணாதுரையை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.