கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தில் பாய்ந்ததால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரில் இருந்து அரசு பேருந்து காலை 7 மணி அளவில் பந்தலூர் நோக்கி புறப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடுகாணி பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த சரக்கு லாரி ஓட்டுனர் பேருந்திற்கு வழி விடுவதற்காக வாகனத்தை சற்று ஓரம் ஒதுக்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த பள்ளத்தில் பாய்ந்து விட்டது.
இதனை அடுத்து ஓட்டுநர் லாரியை கட்டுப்படுத்தியதால் பள்ளத்தில் கவிழ்ந்து விடாமல் அங்கேயே லாரி நின்று விட்டது. மேலும் அரசு பேருந்தும் அங்கிருந்த மணல் மேட்டின் மீது மோதி நின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய வாகனங்களை மீட்டனர். அதன் பிறகே அப்பகுதியில் போக்குவரத்து சரி செய்யப்பட்டுள்ளது.