லாரி அதிவேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கென்னடிகுப்பம் பகுதியில் ஜல்லி கற்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள் மற்றும் லாரிகள் அதிக வேகத்தில் இயக்கப்படுவதாகவும், இதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜல்லி ஏற்றிக் கொண்டு அதிவேகமாக சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது.
இதனை அடுத்து மின் கம்பத்தில் மோதிய ஜல்லி லாரியை சிறை பிடித்து சாலையில் அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது போக்குவரத்து அதிகமான நேரங்களில் ஜல்லி லாரிகள் இயக்கப்படாது என காவல்துறையினர் அவர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.