வேலூரிலிருந்து லடாக்கிற்கு சைக்கிளில் பயணம் செய்த வாலிபருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள மூஞ்சூர்பட்டு கொல்லைமேடு பகுதியில் வசித்து வரும் சாமிநாதனின் மகன் சதீஷ்குமார். இவர் சைக்கிளில் லடாக்கிற்கு செல்வதற்கு திட்டமிட்டபடி கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி வீட்டிலிருந்து பயணம் மேற்கொண்டார். இதனையடுத்து 34 நாட்கள் சைக்கிளில் பயணம் செய்த சதீஷ்குமார் கடந்த 2-ஆம் தேதி மாலை வேளையில் லடாக் நகரை சென்றடைந்தார்.
இவ்வாறு சதீஷ்குமார் பயணம் செய்த நாட்களில் தினமும் சுமார் 150 கிலோ மீட்டருக்கு மேல் சைக்கிள் ஓட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வேலூரிலிருந்து லடாக் வரையிலும் 17 மாநிலங்களை கடந்து 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சதீஷ்குமார் சைக்கிளில் பயணம் செய்துள்ளார். இதற்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோ தனது பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் சதீஷ்குமார் பதிவிட்டார்.
இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் சதீஷ்குமாருக்கு பெரும்பாலானோர் தங்களது வாழ்த்துக்களை கூறியுள்ளனர். இதுகுறித்து சதீஷ்குமார் கூறியதாவது ‘இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்த இடத்திற்கு சென்று வந்தது என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு லடாக்கிற்கு சைக்கிளில் பயணம் செய்த சதீஷ்குமாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.