கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள தீரன் சின்ன மலை நகர் பகுதியில் வேலப்பன் என்ற கட்டிட தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு நந்தகுமார் என்ற மகனும், பி.காம் பட்டதாரியான கௌசல்யா என்று மக்களும் இருக்கின்றனர். இவரது மகள் கவுசல்யாவை கிளாங்குண்டல் பகுதியில் கட்டிட வேலை பார்த்து வந்த கணேசமூர்த்தி என்பவருக்கு கடந்த ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் கணேசமூர்த்தி அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்ததால் கௌசல்யா அதனை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரது பெற்றோர் கௌசல்யாவை அவர்களது வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டனர். அப்போது கௌசல்யா தனது பெற்றோரிடம் தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும், சிறிது காலம் இங்கேயே தங்கி இருக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன் பின் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு கௌசல்யாவின் தாய் பழனியம்மாள் சென்ற பிறகு, அவருடைய தந்தை வேலப்பன் வெள்ளகோவில் கடைவீதிக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளார். இதனை அடுத்து வேலப்பன் தனது மகள் கௌசல்யாவிற்கு காலை உணவு வாங்கி விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கௌசல்யா தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து உடனடியாக வெள்ளகோவில் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வெள்ளகோவில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு கௌசல்யாவிற்கு திருமணமாகி ஒரு ஆண்டுகளே ஆன நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து தாராபுரம் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறார்.