டிரைவரின் கவனக் குறைவால் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆளவந்தான் இந்திராநகர் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரோகிணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ராமஜெயம் என்ற மகள் இருக்கிறார். இவரது மகள் ராமஜெயத்தை தாராநல்லூர் பகுதியில் வசித்து வரும் கிருஷ்ணர் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணனின் உறவினர் ஒருவர் இறந்துவிட்டதால், அந்த இதுக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு ரோகினி வந்துள்ளார். அதன்பின் அவர் பேருந்தின் முன்பக்க படிக்கட்டு வழியாக இறங்கி முன் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்ததை கவனிக்காத பேருந்து டிரைவர் பேருந்தை முன் நோக்கி நகர்த்தியுள்ளார்.
இதனால் பேருந்து மோதி கீழே விழுந்த ரோகினி இடுப்புப் பகுதியில் பேருந்தின் முன் சக்கரம் ஏறி இறங்கி உள்ளது. இதனால் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ரோகிணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் அஜாக்கிரதையாக பேருந்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பேருந்து டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.