Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பெண்ணின் மர்மமான மரணம்…. அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடல்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

கொய்யா தோட்டத்திலிருந்து அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள பூலாங்குளம் கிராமத்தில் இருக்கும் ஒரு கொய்யாத்தோப்பில் கடும் துர்நாற்றம் வீசியதால் அவ்வழியாக சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் அந்த பெண்ணின் உடலை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த பெண் விருதுநகர் மாவட்ட சேர்ந்த பெரியசாமி என்பவரது மனைவி ஜெனிபர் என்ற அழகுமீனா என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அழகுமீனா தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதனை அடுத்து வடக்கு குளம் பகுதியில் வசிக்கும் ஒருவருடன் மீனாவுக்கு பழக்கம் ஏற்பட்டதால் அந்த நபர் மீனாவை அடைக்கலம் பட்டணத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்க வைத்துள்ளார்.

இந்நிலையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மீனா உடல் நலம் சரியில்லாததால் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அதன்பின் அழகுமீனா கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென மர்மமான முறையில் இறந்ததால் வடக்கு குளத்தை சேர்ந்த அந்த நபர் தனது உறவினரின் தோட்டத்தில் புதைப்பதற்காக சாக்குமூட்டையில் அந்த பெண்ணின் உடலை கட்டிக் கொண்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அழகுமீனா உடல்நலக்குறைவால் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது தெரியவரும் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |