விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் இருந்து மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிறுனாத்தூர் சாலையூரில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் டெபுடி ஜெனரல் மேனேஜராக சென்னை ஏர்போர்ட்டில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு ராஜகுமாரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சுப்பிரமணி மற்றும் அவரது மகன் சுரேஷ் என்பவரும் பயிரிட்டு உள்ளனர். இந்நிலையில் நிலத்தின் உரிமையாளருக்கு தெரியாமல் எலித்தொல்லையை கட்டுப்படுத்துவதற்காக இவர்கள் நிலத்தை சுற்றி மின்சார வேலி அமைத்துள்ளனர்.
இதனையடுத்து தனது இடத்திற்கு சென்ற ராஜகுமாரி மீது எதிர்பாராவிதமாக மின்சாரம் தாக்கி உள்ளது. அதன் பின் அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த கீழ்பெண்ணாத்தூர் காவல்துறையினர் சுப்பிரமணி மற்றும் அவரது மகன் சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.