உணவு சமைத்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக உடலில் தீப்பிடித்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள எடையாத்தூர் பகுதியில் ரகுநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் இறந்து விட்ட நிலையில் இவரது மனைவி ஹேமலதா இரண்டு மகள்கள் மற்றும் தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஹேமலதா குழந்தைகளுக்கு இரவு சமையல் செய்துகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது உடையில் தீப்பித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஹேமலதாவின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் வருவதற்குள் அவரது உடல் தீயில் கருகி விட்டது.
இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் கருகிய நிலையில் இருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதன் பின் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக ஹேமலதா கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சை பலனின்றி ஹேமலதா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கழுகுன்றம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.