Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தவறுதலான ஊசி போட்டதால்…. குழந்தை பிறந்த 3 நாளில் நடந்த சோகம்…. திருவள்ளூரில் பரபரப்பு…!!

தவறுதலான ஊசி போட்டதால் பிரசவமான மூன்று நாட்களிலேயே பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள களக்காட்டூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வனிதா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 22-ஆம் தேதி நிறைமாத கர்ப்பிணியான வனிதாவை அவரது குடும்பத்தினர் பிரசவத்திற்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு வனிதாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன்பின் மருத்துவமனையில் தங்கியிருந்து மூன்று நாட்கள் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் வனிதாவிற்கு பணியில் இருந்த நர்ஸ் மணிமாலா என்பவர் தவறான ஊசியை செலுத்தி உள்ளார்.

இதனால் சில மணி நேரத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு வனிதா சுயநினைவை இழந்து விட்டார். இதனையடுத்து உடனடியாக வனிதாவை மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வனிதா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை தொடர்ந்து வனிதாவின் இறப்பிற்கு மருத்துவர்களின் கவனக் குறைவு தான் காரணம் எனவும், தவறு செய்த நர்ஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் பிறகு பிறந்த மூன்று நாட்களே ஆன பச்சிளம் குழந்தையுடன் வனிதாவின் உறவினர்கள் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாவட்ட ஆட்சியர் போன்றோரிடம் புகார் மனு அளித்துள்ளனர். இதனையடுத்து மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸின் உத்தரவின்படி கவனக்குறைவாக வேலை பார்த்த நர்ஸ் மணிமாலாவை மருத்துவக் கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

Categories

Tech |