உடல்நிலை சரியில்லாமல் இருந்த பெண் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சர்வ தீர்த்த குளத்தில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக சிவகாஞ்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த பெண் காஞ்சிபுரம் பகுதியில் வசித்து வந்த பூங்கொடி என்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
மேலும் அந்தப் பெண் பல ஆண்டுகளாக உடல்நிலை சரி இல்லாமல் அவதிப்பட்டுவந்ததும், இதனால் விரக்தியில் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அதோடு பூங்கொடியின் உறவினர்கள் அவரை சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல முடிவெடுத்து இருந்த நிலையில் அவர் தற்கொலை செய்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.