முட்புதருக்குள் பெண் ஒருவர் காயங்களுடன் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி ஊத்துக்காடு ரோடு பகுதியில் இருக்கும் முட்புதரில் காயங்களுடன் பெண் ஒருவர் மயங்கி கிடந்ததை பார்த்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உடனடியாக அந்தப் பெண்ணை மீட்டு பொதுமக்கள் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
இச்சம்பவம் பற்றி காவல்துறையினர் கூறும்போது, அவர் மயங்கி கிடந்த இடத்திற்கு சென்று பார்த்த போது அங்கு தரதரவென அந்த பெண்ணை இழுத்து வந்ததற்கான அடையாளங்கள் இருந்துள்ளது. இதனால் அந்தப் பெண்ணை கொலை செய்யும் நோக்கத்தோடு யாரோ ஒருவர் இவ்வாறு காயப்படுத்தி முட்புதருக்குள் வீசி சென்றிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.