வீட்டில் வேலைபார்த்து வந்த பெண்ணை சித்திரவதை செய்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வம்சாவளி பெண் காயத்ரி முருகையன் என்பவர் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். கடந்த 2015ஆம் ஆண்டு இவரது வீட்டில் மியான்மர் நாட்டைச் சேர்ந்த பியாங் நகாய் டான் என்ற பெண் வேலைக்காரியாக சேர்ந்துள்ளார். இவர் தனது 3 வயது மகனை காப்பாற்றுவதற்காக வீட்டு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவர் திடீரென இறந்ததால் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த பரிசோதனையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் அவரது உடலில் 47 வெளிப்புற காயங்கள் மற்றும் 31 காய வடுக்கள் இருந்துள்ளன.
இதனையடுத்து போலீசார் காயத்ரியை கைது செய்து விசாரணை நடத்தியபோது, அவர் பியாங் நகாய் வீட்டு வேலைக்கு சேர்ந்த 5 மாதத்தில் இருந்தே அவரை சித்திரவதை செய்தது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. அதாவது அவருக்கு சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போட்டு அடித்து உதைத்துள்ளார். மேலும் பல்வேறு சித்திரவதைகளை பொறுத்துக் கொண்ட அவர் மூளையில் காயம் ஏற்பட்டதால் இறந்துவிட்டார் எனவும், அவர் இறக்கும் போது அவரின் உடல் எடையானது 24 கிலோவாக மட்டுமே இருந்துள்ளது எனவும் தெரியவந்துள்ளது. அதோடு அவரது உடலானது மீட்கப்படும் போது ஜன்னல் கம்பியில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இதனையடுத்து அந்த வேலைக்கார பெண்ணை அடித்து கொலை செய்ததை காயத்ரி முருகையன் போலீசாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார். இதனால் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.