தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் கண்முன்னே பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள தாயனூர் 7 வாய்க்கால் கரை பகுதியில் குமார் லெக்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரங்கம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் விவசாயம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். இதில் குமாரனின் தம்பியான பூசை மணி என்பவருக்கு வீரவேல், மருதுபாண்டி, அஜித் குமார் என்ற மூன்று மகன்கள் இருக்கின்றனர். இந்த குடும்பத்தினர் அரசுக்கு சொந்தமான ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் குமாரனும் ரங்கம்மாளும் இணைந்து தங்கள் வயலில் பயிரிட்டுள்ள கத்திரி செடிக்கு ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து செடிகளுக்கு பாய்ச்சியுள்ளனர். இதனை பார்த்ததும் கோபம் அடைந்த பூசை மணி உங்கள் வயலுக்கு நீங்கள் எப்படி முதலில் தண்ணீர் பாய்ச்சலாம் என்று கூறி தகராறு செய்துள்ளார். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து வீட்டிற்கு சென்ற பூசை மணி நடந்த அனைத்து சம்பவங்களையும் தனது மகன்களிடம் கூறியதால் கோபம் அடைந்த அவர்கள் தங்களது பெரியப்பா குமாரனின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அங்கு அவர்கள் 3 பேரும் அருகில் கிடந்த கம்பியை எடுத்து குமாரனையும், ரங்கம்மாளையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ரங்கம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் குமார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பூசை மணி, அவரது மகன்கள் அஜித்குமார், வீரவேல், மருதுபாண்டி ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.