மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்தவரை தடுக்க முயன்ற பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் காசி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு பாண்டி தேவி என்ற இளம் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான காசி அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து காசி மது போதையில் பாண்டி தேவியை தாக்கியபோது அதே பகுதியில் வசிக்கும் பாண்டி தேவியின் சித்தி ராஜலட்சுமி, உறவினரான கோவிந்தன் மற்றும் மார்த்தாண்டம் போன்றோர் காசியை தடுக்க முயற்சி செய்துள்ளனர்.
அப்போது ராஜலட்சுமி, கோவிந்தன், மார்த்தாண்டம் ஆகிய 3 பேரையும் காசி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதன் பின் படுகாயமடைந்த 3 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு ராஜலட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த கோவிந்தன் மற்றும் மார்த்தாண்டம் இருவரும் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காசியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.