தந்தை மகனின் தகராறை விலக்கி வைக்க முயற்சி செய்த போது பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம் சீகூர் கிராமத்தில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவானி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு வெங்கடேசன் என்ற மகன் உள்ளார். இதில் வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ரங்கசாமி தனது சொந்த ஊருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு வந்துள்ளார். இந்நிலையில் தனது தந்தையான ரங்கசாமியிடம் வெங்கடேசன் கார் வாங்குவதற்காக பணம் கேட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பேசிக்கொண்டிருக்கும் போது தந்தைக்கும், மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பவானி அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருந்த போது இரண்டு பேரையும் விலக்கி விட முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பவானிக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது. ஆனால் யார் கையில் கத்தி இருந்தது என்ற விவரம் தெரியவில்லை. இதனை அடுத்து படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே பவானி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.