இரண்டு நாட்களுக்கு பிறகு தற்கொலைக்கு முயற்சி செய்த பெண் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிபட்டி பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட முத்தையாலு என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்கு சென்ற முத்தையாலு நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் ஆனந்தன் பல்வேறு இடங்களில் அவரை தேடி பார்த்துள்ளார். ஆனாலும் முத்தையாலு கிடைக்காத காரணத்தினால் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் ஆனந்தன் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து 2 நாட்களுக்குப் பிறகு விநாயகர் கோவிலுக்கு அருகில் இருக்கும் கிணற்றில் இருந்து ஒரு பெண் காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டுள்ளார்.
இதனை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த போது கிணற்றுக்குள் முத்தையாலு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பாப்பிரெட்டிபட்டி தீயணைப்பு வீரர்கள் முத்தையாலுவை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அதன் பின் அவரிடம் நடத்திய விசாரணையில் முத்தையாலு கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றது தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.