கணவன் மது அருந்திவிட்டு தகராறு செய்ததால் மனைவி தனது 2 குழந்தைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள திருநின்றவூர் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு தீக்ஷிதா என்ற பெண் குழந்தையும், அஸ்வின் என்ற 1 1/2 வயது ஆண் குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ரமேஷ் அடிக்கடி மது அருந்திவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது மன உளைச்சலில் இருந்த கௌரி தனது இரண்டு குழந்தைகளையும் தனித்தனியாகப் புடவையில் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்துள்ளார்.
அதன் பிறகு கௌரியும் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை தொடர்ந்து கௌரி நீண்ட நேரமாக வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த போது தனது 2 குழந்தைகளுடன் கௌரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தாய் மற்றும் குழந்தைகளின் சடலத்தை கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.