தமிழகத்தின் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட். இவர் கடந்த 2006-11 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தின் போது அரசுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 1989-ம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த ஜாபர் தமிழக காவல்துறையில் சிபிசிஐடி டிஜிபி மற்றும் உளவுத்துறை ஐஜி என பல உயர் பதவிகளில் வகித்துள்ளார். இவர் உளவுத்துறை அதிகாரியாக இருந்தபோது தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகப்படுத்தி வீட்டு வசதி வாரியத்திடமிருந்து நில ஒதுக்கீடு பெற்றுள்ளார். அதன்படி சென்னையில் உள்ள திருவான்மியூரில் பல கோடி மதிப்புள்ள சொத்தை பெற்றுள்ளார்.
இந்த நிலத்தில் வர்த்தக நோக்கில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு திட்டமிட்டதாக கூறப்படுகிறது. அதோடு பண மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ஜாபர் மீது கடந்த 2011-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு விசாரணையை கடந்த 2020-ம் ஆண்டு முதல் அமலாக்த்துறை எடுத்துக் கொண்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தற்போது ஜாபரின் மனைவி பர்வீன் ஜாபரின் சொத்துக்கள் அனைத்தையும் முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதோடு தமிழகத்தின் முன்னாள் முதல்வரின் செயலாளர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் மற்றும் லேண்ட் மார்க் கட்டண நிறுவனத்தின் உரிமையாளர் டி உதயகுமார் ஆகியோருக்கு சொந்தமான சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு சொந்தமான 14.23 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.