பட்டாவிற்கான இடத்தை மீட்டுத் தரவில்லையென்றால் தீக்குளிப்போம் என்று பொதுமக்கள் மிரட்டியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள குமரலிங்கம் பகுதியில் வசிக்கும் 90 ஏழை குடும்பங்களுக்கு வீடு இல்லாததால் கடந்த 2014ஆம் ஆண்டு இலவச வீட்டு மனை பட்டா தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பட்டாவிற்கு உரிய இடம் அவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த மக்கள் பட்டா வழங்கப்பட்ட இடத்தில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை எந்த அதிகாரியும் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் குமரலிங்கம் பேருந்து நிலையத்திற்குச் சென்று போராட்டம் நடத்தியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசும்போது, அவர்கள் வீட்டு வாடகை கட்ட முடியாத நிலையில் இருக்கும் ஏழை தொழிலாளர்கள் என்பதும், பட்டா வழங்கி பல நாட்களாகியும் இடம் அவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டபோது பட்டா வழங்கப்பட்டுவிட்டதால் வீடுகளை நீங்களாகவே கட்டிக் கொள்ளுங்கள் என்று கூறியது தெரியவந்துள்ளது. மேலும் பட்டா வழங்கப்பட்ட இடத்தில் பயிர் செய்யும் விவசாயிகளின் வழக்கு நிலுவையில் உள்ளதால் இடத்தை தர அவர்கள் மறுப்பு தெரிவிகின்றனர். எனவே பட்டா வழங்கப்பட்ட இடத்தை அதிகாரிகள் மீட்டு தராவிட்டால் 90 குடும்பத்தினரும் தீக்குளிப்போம் என மிரட்டிவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றுள்ளனர்.