லாரி மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆந்திராவிலிருந்து கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு மீன் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு கண்டெய்னர் லாரி தர்மபுரி மாவட்டத்திலுள்ள தொப்பூர் கணவாய் வழியாக வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியைச் சேர்ந்த டிரைவர் சாயி என்பவர் ஓட்டி வந்துள்ளார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த மாற்று டிரைவர் மோகன் என்பவரும் இருந்துள்ளார். இதனையடுத்து லாரி தொப்பூர் கணவாய் இரட்டைப்பாலம் அருகில் வந்தபோது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்து லாரி முன்னால் சென்ற மற்றொரு லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
அப்போது லாரியில் இருந்த டிரைவர்கள் சாயி, மாற்று டிரைவர் மோகன் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பேட்டப்பா, பிரகாஷ் ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் ரோந்து படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தினால் தர்மபுரி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன்பின் காவல்துறையினர் மற்றும் ஊழியர்கள் விபத்துக்குள்ளான லாரிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.