லாரி மீது மினிலாரி மோதி காய்கறி வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள முல்லா தோட்டப் பகுதியில் ராஜா முகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காய்கறி மொத்த வியாபாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசலில் இருக்கும் மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்குவதற்காக விருதாச்சலத்தில் இருந்து மினி லாரியில் சென்றுள்ளார். அப்போது சிறுபாக்கம் சோதனைச்சாவடி அருகாமையில் வந்து கொண்டிருக்கும் போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராவிதமாக மோதியுள்ளது.
இதில் மினி லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் ராஜா முகமது அதில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதில் மணிகண்டன் என்பவர் பலத்த காயம் அடைந்துள்ளார். இதனையடுத்து மணிகண்டனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.