லாரி மூலம் ரேஷன் அரிசி கடத்துவதற்கு முயற்சி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து கன்னியாகுமரியின் வழியாக ரேஷன் அரிசி கேரள மாநிலத்திற்கு கடத்தப்படுவதை தடுப்பதற்காக வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மார்த்தாண்டம் சந்திப்பு காந்தி மைதானம் பகுதியில் ஒரு லாரி சென்று கொண்டிருக்கும்போது சந்தேகமடைந்த காவல்துறையினர் அதனை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் லாரியில் 20 டன் அரிசி இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் லாரி மற்றும் அரிசியை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அதன் பின் லாரி டிரைவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் திப்பிரமலையைச் சேர்ந்த சதீஸ் என்பதும், ரேஷன் அரிசியை தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்துள்ளது. இதனைதொடர்ந்து காவல்துறையினர் சதீசை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.